

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், போக்குவரத்து முனையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 டாஸ்மாக் கடைகளை மூடும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி ஏற்படுத்த வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை காலி பணியிடங்களின் அடிப்படையில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களிலும், டாஸ்மாக் கிடங்குகளிலும் பணியமர்த்த டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அறிவிப்பின்படி மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப் பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, அவர்களை மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியமர்த்த வேண்டும்.
எஞ்சிய பணியாளர்களை கிடங்கு பணிகளிலும், மாவட்ட அலுவலக பணிகளிலும் பணி நிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு மேலாண் இயக்குநர், அனைத்து முதுநிலை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.