“உள்ளாட்சி தேர்தல் கூட்டணியில் மாற்றம்; தமாகா தனித்தன்மையோடு இயங்கும்” - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

Updated on
1 min read

பட்டுக்கோட்டை: “மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணியில் தமாகா இனிமேல் இடம் பெறப் போவதில்லை. தனித்தன்மையோடு இயக்கத்தை நடத்த இருக்கிறோம். வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும்” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது: மேகேதாட்டுவில் அணை கட்ட கூடாது என்பதில், தமிழகமும், தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கிறார்கள். மத்திய ஜல்சக்தி துறையின் இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேகேதாட்டு குறித்து கூறிய பதில், விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தை புறக்கணிக்கும் வகையில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது, ஏற்புடையது அல்ல. அவர் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பு, தமிழகத்தின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி 15 நாட்களுக்கு, 3,500 கன அடி நீர் விதம் கர்நாடக அரசு தாமதமின்றி உடனடியாக திறந்து விட வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி, புதிய அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர் சாதன கிடங்கு, நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், தென்னை வளர்ச்சி வாரியம் முழு திறனுடன் செயல்பட வேண்டும். அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை பாதுகாத்து, கண்காணிக்க வேண்டும். லாக்கப் மரணங்கள் விவகாரங்களில், போலீஸார் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம். இருப்பினும் தேசிய பாடல் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

தற்போது நடக்கும் பிரச்சினைகளை பார்க்கும்போது நீட் தேர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, அது தேவையில்லை என்ற நிலை ஏற்படும் வகையில் மாணவர்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணியில் தமாகா இனிமேல் இடம் பெறப் போவதில்லை. தனித்தன்மையோடு இயக்கத்தை நடத்த இருக்கிறோம். வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணி அமைப்பது குறித்து உரிய நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ஜி.கே.வாசன்</p></div>
நகை கொள்ளை வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in