

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸ் ஆதரவாளர் உள்ளிட்ட மற்ற அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான திமுகவின் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோரின் 6 ஆண்டு பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி, 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த பிப்.18-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனு தாக்கல் கடந்த பிப்.26-ம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில், திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை. பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ப.சுவாமிநாதன் உள்ளிட்ட 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி இரா.சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பி.தேன்மொழி ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று பரிசீலனை செய்தனர்.
அப்போது, அன்புமணியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று சுவாமிநாதன் ஆட்சேபம் தெரிவித்தார். அன்புமணி பாமகவின் தலைவர் இல்லை என்பதற்கான நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் ஆணைய பதில்கள் அடங்கிய ஆட்சேப மனுவை வழங்கினார். அவரது ஆட்சேபங்களை நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியை சேர்ந்த 4 பேர், அன்புமணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்களின் முன்மொழிவு கடிதங்கள் இல்லாததால், பாமகவின் சுவாமிநாதன் உள்ளிட்ட 6 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கு 6 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறாது. எனினும், வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், அன்று மாலை வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவார்கள்.
அன்புமணி மனுவை எதிர்த்து மேல்முறையீடு: ராமதாஸ் தரப்பு தகவல்
மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பாமக வழக்கறிஞர் பாலு கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘‘தேர்தல் விதிகளில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வேட்புமனுவை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தை நாடலாம்’’ என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அன்புமணியின் வீட்டில் உதவியாளராக இருந்த சுவாமிநாதனை ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். தேர்தல் விதிப்படி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட ஒரு எம்எல்ஏகூட இல்லாத நிலையில், அன்புமணியை அசிங்கப்படுத்த வேண்டும், அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களில் இனி ராமதாஸ் ஈடுபட வேண்டாம். அன்புமணியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இனி வருங்காலத்தில், அன்புமணி தலைமையில், அவர் வழங்கும் சான்று அடிப்படையில், தேர்தலில் ‘மாம்பழம்’ சின்னத்தை பெற்று போட்டியிட எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் சுவாமிநாதன் கூறும்போது, ‘‘வேட்புமனு பரிசீலனையில் வெளிப்படைத் தன்மை இல்லை. அன்புமணி பாமக தலைவரே இல்லை. போலியான ஆவணத்தை வழங்கி, தனது பதவிக் காலத்தை நீட்டித்துள்ளார். அது தொடர்பான ஆதாரங்களை வழங்கி,அவரது மனுவை ஏற்கக் கூடாது என வாதிட்டோம்.
ஆவணத்தை ஆய்வு செய்யாமல், அன்புமணியின் மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அன்புமணியின் மனுவை நிராகரிக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்றார்.