

மடப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் தாயார் மாலதி, வழக்கறிஞர் கணேஷ்குமார் உள்ளிட்டோர்.
திருப்புவனம்: என் மகன் மீது பொய்யான திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு 2025 ஜூன் 27-ல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா சுவாமி கும்பிட வந்தார். அப்போது தனது தங்கச் சங்கிலி திருடு போனதாகப் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக, கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் என்பவரை தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், அஜித்குமார் மீது தெரிவிக்கப்பட்ட நகை திருட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திடீர் திருப்பமாக, நிகிதா அளித்த திருட்டு புகாரே பொய்யானது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிபிஐ தெரிவித்தது.
இது தொடர்பாக மடப்புரத்தில் அஜித்குமாரின் தாயார் மாலதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நிகிதா நகை திருட்டை விசாரிக்க போலீஸார் எனது 2 மகன்களையும் அழைத்துச் சென்றனர். நகையை எடுத்திருந்தால் சிறையில் அடைப்பார்கள். இல்லையேல் விட்டுவிடுவார்கள் என்று கருதினேன்.
ஆனால், கொடூரமாக அடித்து எனது மகனை கொன்றனர். எனது மகன் பயங்கரவாதியா? அவரைத் தாக்கியவர்கள் அரக்கர்களாக செயல்பட்டுள்ளனர். அவருக்கு உணவுகூட கொடுக்காமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
எனது மகன் நகை திருடியதை யார் பார்த்தது? நாங்கள் கஷ்டப்பட்டாலும், எனது பிள்ளைகளைத் தவறானவர்களாக வளர்க்கவில்லை. எனது மகன் திருடியிருக்க மாட்டான் என நான் நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், அது உலகத்துக்குத் தெரிய வேண்டும் என்று காத்திருந்தேன். தற்போதுதான் விசாரணையில் எனது மகன் திருடவில்லை என்று தகவல் வந்துள்ளது.
யாரோ 5 பேர் கூறித்தான் எனது மகனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த 5 பேர் யார் என்பதை விசாரிக்க வேண்டும். கைதான காவலர்கள் அனைவரையும் வெளியேவிடக் கூடாது. மகன் மீது தவறாக திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் ஏன் பொய் புகார் கொடுத்தார் என்பதை விசாரிக்க வேண்டும்.
அஜித்குமாரை தாக்கச் சொன்னது யார்? பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்ததாகச் சொன்னார்கள். யார் அந்த ‘பெரிய இடம்’ என்பதையும் விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அஜித்குமாரின் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறியதாவது: அஜித்குமார் குடும்பத்தினர் தற்போதுதான் நிம்மதி அடைந்துள்ளனர். நிகிதா திட்டமிட்டே பொய் புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருந்தபோது, டிஎஸ்பி தனிப்படையை விசாரிக்கச் சொன்னது ஏன்? டிஎஸ்பிக்கு அழுத்தம் கொடுத்தவர் யார் என்பதையும் விசாரிக்க வேண்டும்.
நிகிதா மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் தாக்கியதில் காயமடைந்த நவீன்குமார், பிரவீன்குமார், அருண், வினோத் ஆகியோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
அஜித்குமார், பிரவீன்குமார், அழகுபொன்னு மற்றும் காவலர்களின் செல்போனில் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் கூறினார்.