

ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தேசியப் பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கோவை டாடாபாத் பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர்.
கோவை: கட்டுமானத் தொழிலாளர் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோவையில் நேற்று தொடங்கிய ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தேசியப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் 2 நாள் தேசியப் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, டாடாபாத் ஜீவா மன்றம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா நிஜாம், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜயன் குனுச்சேரி, ஏஐடியுசி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பேரணி சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற தேசியப் பொதுக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசால் கலைக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கும் புதிய 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் கட்டுமானத் தொழிலாளர்களின் நலவாரியத்தை சிதைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் நீக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் பெயரை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் பிப். 12-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள பொது வேலை
நிறுத்த போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.