

சென்னை: திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தொழிற்சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடனேயே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 329 பேருந்து பணிமனைகளிலும் அனைத்து ஓட்டுநர்களும் வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட வேண்டும் என்பதே விதி.
லைட் டியூட்டி என்று சொல்லப்படும் இலகு ரக பணிகளில் இருக்கும் பல ஆளுங்கட்சி திமுக தொழிற்சங்க ஓட்டுநர்கள் இதுவரை வழக்கமான பணிக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து சேலம், கோவை உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளர்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் ஆளுங்கட்சி ஓட்டுநர்களை வழக்கமான பணிகளுக்கு விடுவிக்கவில்லை.
உடனடியாக அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழக்கமான பணியை வழங்க வேண்டும். இதை செய்யத் தவறினால் அதிமுக தொழிற்சங்க ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவர்.
லைட் டியூட்டி பணியில் ஒரு பணிமனைக்கு 10 முதல் 15 நபர்கள் இருப்பர். தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகத்தின் மொத்த பணியாளர்களான ஒரு லட்சம் பேரில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் லைட் டியூட்டியில் இருப்பார்கள்.
லைட் டியூட்டியில் இருப்பவர்கள் அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டுவதாக கூறிச் சென்றுவிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மற்ற ஓட்டுநர்கள் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.