சென்னை: அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புரட்சிகரமான பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.
தன்னலம் கருதாது, தமிழக மக்களுக்காகப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு அதிமுகவினரின் இன்றியமையாத கடமையாகும்.
அந்த வகையில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட நுழைவாயிலின் உள் பகுதியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது அதிமுகவின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகள் தொண்டர்கள், அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படங்களை வைத்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அவரது நினைவைப் போற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.