

திண்டுக்கல்: நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தனது வெற்றியைத் தக்கவைக்க முயற்சிக்கும் நிலையில், அதைத் தட்டிப்பறிக்க திமுக கூட்டணி முயற்சிக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சி போட்டியிடுகிறது.
இதன் வேட்பாளராக செல்வக்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் போட்டியிடுகிறார். தவெக சார்பில் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் அழகம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நத்தம் பேரூராட்சி, நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகள், சாணார்பட்டி ஒன்றியத்தில் 21, திண்டுக்கல் ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகள் உள்ளன.
தொகுதி பிரச்சினைகள்
நத்தம் தொகுதி கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. மா, புளிய மரங்கள் அதிகம் உள்ளன. மாம்பழம் அதிக விளைச்சல் உள்ளதால் மாம்பழக் கூழ் தொழிற்சாலை கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மா விவசாயிகளிடம் உள்ளது.
தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் நத்தம் தொகுதி உள்ளது. இருந்தபோதிலும் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை அதிகம் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் உள்ளது.
நத்தம் தொகுதியில் உள்ள சந்தனவர்த் தினி ஆறு மணல் திருட்டால் உருக்குலைந்து போய் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததோடு குடிநீரின் சுவையும் குன்றிப்போனது.
ஆற்றோர விளைநிலங்களில் உள்ள கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்வோர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரைத் தடுக்க சந்தனவர்த்தினி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரி்க்கையும் பல ஆண்டுகளாக உள்ளது.
தற்போதைய களநிலவரம்
நத்தம் தொகுதியில் தமிழர்தேசம், அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட 17 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் செல்வக்குமார் திமுக கூட்டணி வாக்குகளுடன் தனது சமுதாய வாக்குகளும் கைகொடுத்து வெற்றிக்கான வாய்ப்புக்களை கொடுக்கும் என நம்புகிறார்.
அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதனோ, இது எனக்கு கடைசி தேர்தல், எனவே என்னை இந்த முறை வெற்றிபெறச் செய்யுங்கள் என உருக்கமான வேண்டுகோளை மக்களிடம் வைத்து வருகிறார்.
தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அவரவர் கொள்கைகளை முன் நிறுத்தி, தமிழர் தேசம், அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை எங்கும் காணமுடியவில்லை.
இதுவரை எம்எல்ஏக்கள்
நத்தம் தொகுதியில் 1977-ம் ஆண்டு முதல் நடந்த 11 தேர்தலில் (1999 இடைத்தேர்தல்) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆண்டி அம்பலம் தொடர்ந்து ஆறு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இறந்த பிறகு 1999 இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நத்தம் ஆர்.விஸ்வநாதன் போட்டியிட்டு வெற்றியைத் தொடங்கி தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார்.
நத்தம் ஆர்.விஸ்வநாதன் தொகுதி மாறியதால், 2016 தேர்தலில் முதன்முறையாக இந்த தொகுதியில் திமுக வெற்றிபெற்றது. நத்தம் தொகுதியில் அதிமுக 5 முறை வெற்றிபெற்ற நிலையில், திமுக ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
அதிகமுறை இந்த தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றாலும், இந்த முறை நத்தம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் போராடி வருகிறார்.
அதிமுக வேட்பாளரோ, நமக்குப் பழகிய தொகுதி மக்கள், நம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,28,229
பெண்கள் - 1,32,854
மூன்றாம் பாலினத்தவர் - 69
மொத்த வாக்காளர்கள் - 2,61,152
மொத்த வாக்குச்சாவடிகள் - 359