இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கியதன் பின்னணி

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கியதன் பின்னணி
Updated on: 
1 min read

சென்னை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிட்ட சத்யபாமாவின் செயல்பாட்டை அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள் என்பதால் இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றிபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பினார். ஆனால் தவெக வெற்றி பெற்றது.

இதேபோல் மதுராந்தகம் தொகுதியில், அதிமுகவிலிருந்து விலகி, தவெக வேட்பாளராக போட்டியிடும் மரகதத்தின் நடவடிக்கையை அதிமுகவினர் மன்னிக்க மாட்டார்கள். எனவே வெற்றி பெறுவோம் என பழனிசாமி நம்பிய நிலையில் இங்கும் அதிமுக தோற்றது.

கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியது:

இவ்விரு தொகுதிகளிலும் கிராமப்புறங்களில் தான் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைத்தன. அதிமுகவில் கடந்த தேர்தலில் பாமக, தமாக கட்சிகள் கூட்டணியில் இருந்தன. நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தனர். இந்தத் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, அத்தொகுதிகளில் அதிமுக சார்பில் வென்ற மரகதம், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தபோது அதிமுகவினர் பலரும் தவெகவில் இணைந்துவிட்டனர்.

மதுராந்தகம் தனித் தொகுதியாக இருந்தாலும், வன்னியர்கள் வலுவாக இருக்கும் நிலையில், பாமக மறைமுகமாக தவெகவுக்கு தரவளித்தது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அதிமுக வன்னியர்களின் முகமாக விளங்கும் சி.வி.சண்முகம் இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வராததால், கடந்த தேர்தலைப்போல வன்னியர்கள் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.

அதேபோல, தாராபுரம் தொகுதியில் கொங்கு சமூகத்தினர் அதிகமாக உள்ள நிலையில், அதிமுகவில் கொங்கு சமூகத்தின் முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரத்துக்கு வரவில்லை. அதனால் அந்த சமூகத்தினரின் வாக்கும் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.இதனாலேயே இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் தெரிவத்தனர்.

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக சறுக்கியதன் பின்னணி
மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுகவுக்கு ஆறுதலா, எச்சரிக்கையா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in