பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம்

பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம்
Updated on
2 min read

பழநி: பழநி கோயில் நிலமோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வலியுறுத்தி ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.பி.பரமசிவம் கூறும்போது, “பழநி கோயிலில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி நடந்திருப்பது என்பது ஆண்டவனுக்காக அறம் செய்ய வருகிற ஆன்மிக பெரியோர்களை அச்சத்தில் ஆழ்த்துகிற விதமாக இருக்கிறது.

இதற்கு விஜய் தலைமையிலான தவெக அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இந்த முறைகேட்டில் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

எனவே, பொதுவான அமைப்பான சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள், சொத்துகளின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போது தான் ஆன்மிகப் பணி, மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறதா அல்லது தனி நபர்களின் லாபத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறதா என தெரியவரும். இந்த நில முறைகேட்டை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி பழநியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மிகப் பெரிய உயர்மட்ட அழுத்தம் இல்லாமல் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் ஒரு மிகப் பெரிய சக்தி படைத்த, பணம் படைத்த யாரோ ஒருவர் இதற்கு பின்னால் இருக்கிறார். இந்த முறைகேடு காரணமாக இனி கோயில்களுக்கு கொடை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இனி யாருக்காவது வருமா என கேள்வி எழுகிறது.

சம்பந்தப்பட்ட பதிவுத் துறை மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்கள் பேச்சில் முரண்பாடு வெளிப்படுகிறது. அனுபவமில்லாத புதியவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்கள் கவனத்துடன், கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஒரு நிர்வாகத்தை ஏமாற்றி பெரிய முறைகேடு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கிற கோயில் நிலங்களை யார் பாதுகாப்பது? அரசு நிர்வாகத்தை நிர்பந்தித்த நபரை அரசு இயந்திரமான சிபிசிஐடி வைத்து எப்படி கண்டுபிடிக்க முடியும்?

அதனால் பொது அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும். எய்தவன் எங்கேயோ இருக்கிறான். அம்பு சிக்கியிருக்கிறது. வில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தனிநபர் குற்றமாக கருத முடியாது. சிபிசிஐடி விசாரணை என்பது திருடன் கையிலேயே சாவியை கொடுத்தது போல் இருக்கிறது” என்று முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் கூறினார்.

பின்னர், ஆர்ப்பாட்டம் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பரமசிவன், தொடர்ந்து பழநி அடிவாரத்தில் உள்ள சர்ச்சைக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டார்.

பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம்
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in