

எஸ்.பி.வேலுமணி
சென்னை: “சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, “நாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதிமுகதான் எங்களின் உயிர் மூச்சு. கட்சியை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிராபாகர் ஆகியோருக்காகவும் தான் பேசினோம். இபிஎஸ் தான் இப்போதும் பொதுச் செயலாளர். அதில் மாற்றுக் கருத்தில்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான்.
சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். இப்போதும் கட்சியில் உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது. திமுகவை எதிர்த்துதான் இக்கட்சி தொடங்கியது. அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று அவர் கூறினார்.