

எஸ்.பி.வேலுமணி
கோவை: “திமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுவது முக்கியம்” என கோவையில் நடந்த அதிமுக கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.
கோவை புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு, மாநகர் மாவட்டம் என ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சி அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இன்று (ஜன.7) நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. மற்றும் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசியது: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று, பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். கோவை எடப்பாடியார் கோட்டை, எஸ்.பி.வி கோட்டை. யாரும் ஓட்டை போட முடியாது என கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், ஓட்டை போட வேண்டுமென கையில் சம்மட்டியை வைத்துக் கொண்டு ஒரு ஆள் தயாராக உள்ளார். அதை எடுத்து வீசிவிட்டு, ஓட்டையே போடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் கோவைக்கு நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அவர்கள் ஏதாவது ஒரு பொய்யை சொல்லியும், கொலுசு கொடுத்தும் வாக்கு சேகரிப்பார்கள். நாம் ஒவ்வொரு பூத்திலும் இறங்கி பணியாற்றிட வேண்டும். எந்த பூத்திலும் நமது ஓட்டு குறைந்துவிடக் கூடாது.
மகளிர் அணியினர் வீடு வீடாக திண்ணைப் பிரச்சாரம் செய்து, அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இளைஞர்கள் அவர்கள் பக்கம் உள்ளதாக கூறுவதெல்லாம் மாயை. அதிமுகவில் தான் இளைஞர்கள், மகளிர் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் உள்ளனர். இன்றைய சூழலில் திமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது. திமுக மட்டுமல்ல யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.
நமது தேர்தல் பணிகளை நாம் சிறப்பாகவும், தெளிவாகவும் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவது முக்கியம். திமுகவினரை பார்க்கும்பொழுது எந்த வேலையும் செய்யாதது போல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பார்கள். எனவே, நாம் அனைத்து நிர்வாகிகளும், பொறுப்பாளர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் அதிக வாக்குகளை பெற வேண்டும். எஸ்.ஐ.ஆர். சார்ந்த அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் முடித்துவிட வேண்டும். அடுத்தடுத்து வர உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். தொகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதேபோல், ஐ.டி. விங் பிரிவினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். எதிரியை எந்த காலத்தில் நாம் முந்த விட்டுவிடக் கூடாது. அந்த வேகத்தில் நாம் வேலை செய்ய வேண்டும்” என்று எஸ்.பி.வேலுமணி பேசினார்.
இக்கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.