

வைகோவின் சமத்துவ நடைப்பயணம்
சிங்கம்புணரி: “மதுரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் அண்ணன் - தம்பிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே மதவெறியை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிற சில இந்துத்துவா கும்பல்களுக்கு திருப்பரங்குன்றம் தீர்ப்பு சாதகமாக போய்விட்டது” என்று வைகோ கூறினார்.
வைகோ ஜன.2-ம் தேதி சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் தொடங்கினார். 6-ம் நாளான இன்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புழுதிபட்டிக்கு வந்தார். அவருக்கு மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமையில் அக்கட்சியினர் மலர்தூவி, மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மோடி அரசு திட்டமிட்டு மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டது. மாநில அரசு மீது வஞ்சகமாக நிதிச் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுகவை துடைத்தெறிவோம் என்று ஆணவம் , திமிரோடு அமித் ஷா பேசியிருக்கிறார். நான் இந்தக் காலக்கட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருந்தால் அமித் ஷாவை நேருக்கு நேராக எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று கேட்டிருப்பேன்.
போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழகம் அழிந்துவிடும். போதைப் பொருட்களால் சிலர் சில நிமிடங்களிலேயே மிருகங்களாக மாறிவிடுகின்றனர். இளம்பெண்களை நாசமாக்குகின்றனர். கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதால் ஆபத்தான அறிகுறியாக இருக்கிறது. இது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் ஒரு பஞ்சாப் ஆக மாறிவிடக் கூடாது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கில் தனது எல்லை கடந்து, வரம்பை மீறி நீதிபதி ஒருவர் தீர்ப்பளிக்கிறார். அதை மற்ற நீதிபதிகள் வழிமொழிகின்றனர். தமிழகத்தில் ரத்தக் களரிகளை எதிர்பார்க்கிறார்களா நீதிபதிகள்? எல்லை கடந்து விட்டார்கள். ரத்தக் களரி ஏற்பட்டால் நீதிபதிகளே பொறுப்பு. தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது.
சகிப்புத்தன்மை, சமத்துவத்துக்கு அடையாளமான மதுரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே மதவெறியை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிற சில இந்துத்துவா கும்பல்களுக்கு இந்த நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக போய்விட்டது” என்று வைகோ கூறினார்.