“எந்த ஷா வந்தாலென்ன?” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்

“எந்த ஷா வந்தாலென்ன?” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
Updated on
2 min read

திமுகவின் ‘என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ 2-ம்கட்ட பரப்புரை நேற்று தொடங்கிய நிலையில், மயிலாப்பூர் பகுதி கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ‘தமிழ்நாடு தலைகுனியாது-என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ என்ற பரப்புரையை திமுக மேற்கொண்டது. முதல்கட்டமாக 68,463 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது (எஸ்ஐஆர்) திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்காளர்களுக்கு உதவிட அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் கட்ட பரப்புரையை திமுக நேற்று முதல் தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 10-ம் தேதி வரை இந்த பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக செயலாளர்கள் 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், 6.8 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் ஏதுவாக இந்த பரப்புரையை திமுக தலைமைக் கழகம் வடிவமைத்துள்ளது.

அந்தவகையில் மயிலாப்பூர் மேற்கு பகுதி ஆழ்வார்ப்பேட்டை 122-வது வட்டம் பாகம் 24-ல் நடந்த 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 'ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்களில் கட்சியினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடியை பலப்படுத்த வேண்டும். அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதுதவிர ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கையும் முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார். இதையடுத்து திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஒரு மாதம் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர். இந்த குழுக்களில் ஒரு மகளிரேனும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அறிவாலயத்தில் சலசலப்பு: இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், தனது தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்காக முதல்வரை சந்திக்க அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் முதல்வரை சந்திக்க வேண்டுமென கேட்டார். அவர் நீண்ட நேரம் காத்திருந்தும் முதல்வரை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆடலரசன், எஸ்சி பிரிவைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்எல்ஏவை அனுமதிக்க மாட்டீர்களா? என கோபமாக கத்தினார்.

அவரை தடுத்த காவலரிடம், ‘மக்களிடம் ஓட்டு கேட்க நீங்களா வருவீர்கள்? நான் தான் செல்ல வேண்டும். என் தொகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நான் முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். என்னை ஏன் தடுக்கிறீர்கள்? என்று ஆவேசத்துடன் பேசிவிட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அட்டையை அறிவாலயம் வாசலில் தூக்கி எறிந்துவிட்டு தனது காரில் ஏறி புறப்பட முயன்றார்.

இதையடுத்து, திமுக நிர்வாகிகள் அவரிடம் பேசி முதல்வர் காரில் ஏறும் போது சந்திக்க ஏற்பாடு செய்தனர், முதல்வரிடம் பல நாட்களாக உங்களை சந்திக்க வந்தேன் ஆனால், அனுமதிக்க மறுக்கின்றனர் என முறையிட்டார். அவரை சமாதானம் செய்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். இதனால் அறிவாலயத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அமித் ஷாவுக்கு பதில்: இதற்கிடையே, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக துடைத்து எறியப்படும்’ என்று பேசினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும், வியூகங்கள் வகுக்கவும் அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்துக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் (Out of Control) தான்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

“எந்த ஷா வந்தாலென்ன?” - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ரூ.332 கோடியில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 10 நெல் சேமிப்பு வளாகங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in