

சென்னை: ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் உறுதி அளித்துள்ளதாக தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை, அதிமுக எம்எல்ஏ.க்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு, குதிரை பேரத்தின் மூலமாக ஆளுங்கட்சியில் இணைந்தனர்.
இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாங்கள் பேரவைத் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தோம். அந்த புகார் மனுவின் மீது சில விளக்கங்களை பேரவைத் தலைவர் கேட்டிருந்தார்.
அதாவது, அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர், கொறடா எப்போது தேர்வு செய்யப்பட்டனர்? இதற்கான கூட்டம் எங்கே நடைபெற்றது உள்ளிட்ட சில விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. சட்டப்படி கட்சியின் பொதுச்செயலாளர்தான் கொறடாவை நியமிக்க வேண்டும்.
அதன்படி சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நியமனம் நடைபெற்றது. இந்த விவரங்களை தொகுத்து பொதுச்செயலாளர் பழனிசாமி வழங்கிய விளக்கக் கடிதத்தை பேரவைத்தலைவரிடம் கொடுத்தோம். விரைவில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
அதிமுக எம்எல்ஏ.க்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாகக் கூறுவது தவறு. யாரும் வெற்றுத் தாளில் கையெழுத்து போடமாட்டார்கள்.
கொறடாவின் உத்தரவை ஒரு எம்எல்ஏ மீறினால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதுதான் சட்டம். சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்ததாகக்கூறுகிறார்கள். அதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.
பேரவை தலைவர் மீது நம்பிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின்படி கட்சிகள் வழங்கும் நபர்களைத்தான் கொறடா போன்ற பதவிகளுக்கு பேரவைத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். பேரவைத் தலைவர் சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
எம்எல்ஏ.க்கள் விலகியதால் அதிமுக பலவீனப்படவில்லை. கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.