

திண்டுக்கல் சீனிவாசன் |கோப்புப் படம்
மதுரை: “நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவதை கேள்விப்பட்டு தவெக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பதற்றம் அடைகிறார்கள். தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு?” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் இன்று கூறியது: “நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவதை கேள்விப்பட்டு தவெக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பதற்றம் அடைகிறார்கள். தனுஷுக்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு?
தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. முதல்வர் விஜய், அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. அரசின் செயல்பாடுகள் சரியில்லை. முதல்வர் கண்டிப்புடன் இருந்தால்தான் அமைச்சர்கள் பயப்படுவார்கள். முதல்வர் எதைப் பற்றியும் வாய் திறப்பது இல்லை.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களுக்கு அங்கு எந்த மரியாதையும் இல்லை. தவெக அரசு 6 மாதம் தாண்டட்டும், பார்ப்போம். ஏதோ அதிர்ஷ்டத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். தேவர் சமூகம் மட்டுமல்ல, அனைத்து சமுதாய மக்களும் ஆதரிக்கும் ஒரே கட்சி அதிமுகதான்.
அதிமுக கொடுத்த 8 கிராம் தங்கத்தை பஸ்பமாக்கிவிட்டு, ஒரு கிராம் தங்கத்தை கொடுத்துவிட்டு தாய்மாமன் சீர், அண்ணன் சீர்வரிசை என டூப் வேலையைத்தான் முதல்வர் விஜய் செய்து வருகிறார். தேர்தலில் 318 வாக்குறுதிகள் கொடுத்தபோதே பல லட்சம் கோடி ரூபாய் கடன் எனத் தெரியும். தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு கஜானாவில் பணம் இல்லை; பொறுத்திருங்கள் என்கிறார்” என்று அவர் கூறினார்.
‘அதிமுகவை லெட்டர் பேடு கட்சி என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக இருக்கிறதா, இல்லையா என கேட்கும் பரமசிவன் கழுத்து பாம்புபோல் இருக்கும் அமைச்சர் நிர்மல் குமாருக்கு காலம் பதில் சொல்லும்.
எல்லா அரசியல் கட்சிகளிடமும் லெட்டர் பேடு இருக்கும். என்னிடமும் லெட்டர் பேடு உள்ளது, அமைச்சரிடமும் இருக்கும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். ஆனால், அதிமுக தனித்து இடைத்தேர்தலில் களம் கண்டு இரு தொகுதிகளிலும் 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். தவெக 6 கட்சிகள் கூட்டணியில் வென்றுள்ளது” என்றார்.