

தாம்பரத்தில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்.
தாம்பரம்: அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைத்து முன்மாதிரியான தொகுதியாக தாம்பரத்தை மாற்றுவேன் என, அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்துக்கு இடையே ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் மக்களுக்கான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றித் தரப்படும்.
தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக தாம்பரம் தொகுதியை மாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் பழனிசாமி வழிகாட்டுதலின் பேரில் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
பின்னர், ஆட்சி மாற்றத்தின் போது திமுக கிடப்பில் போட்டது. அதிமுக சார்பில் பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்கி, இன்னும் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சிட்லபாக்கம் ஏரி போல் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் சீரமைக்கப்படும்.
தாம்பரம் முடிச்சூர் சாலை, வேளச்சேரி சாலை அகலப்படுத்தும் பணிகள், பெருங்களத்தூர் - வேளச்சேரி சாலையை இணைக்கும் ஈஸ்டன் பைபாஸ் சாலை திட்டத்தை விரைந்து முடிக்கவும் ராஜகீழ்ப்பாக்கம் - கேம்ப் ரோடு, முடிச்சூர் - மணிமங்கலம் சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கவும், தாம்பரம் தொகுதி முழுவதும் தினமும் குடிநீர் கிடைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை போக்கப்படும்.
மேலும், இதய சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் குறைகள் அனைத்தும் முகாம் அமைத்து நிவர்த்தி செய்யப்படும்.
திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சிறுமியர் முதல் மூதாட்டி வரை யாரும் வெளியே பாதுகாப்பாக செல்ல முடியாத அவலநிலை உள்ளது.
இதனால், திமுக ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.