

திருச்சி: தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்டு மேரியாட் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு தங்கினார்.
அன்று இரவு அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், அர்ஜூன்ராம் மேக்வால், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்.பி.க்கள் டி.ரத்தினவேல், ப.குமார் உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்தனர்.
இந்நிலையில், மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றுவிட்டு ஹோட்டலுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சந்தித்தார்.
அதன்பின், அமித் ஷா தெரிவித்ததன்பேரில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசியதாக கூறப் படுகிறது.