

சிவகாசி: தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த, பட்டாசு தொழில் கழகம் அமைக்க தாக்கலான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் நடுநிலை அறிவுரையாளர் (அமிகஸ் கியூரி) வழக்கறிஞர் டி.கீதா ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கவும், பட்டாசு ஆலை விபத்துக்களை தடுப்பது மற்றும் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தந்தையை இழந்த சாத்துார் மேலதாயில்பட்டியை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ராஜாத்தி, பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க கோரி 2014-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு கடிதம் எழுதினார். இதனடிப்படையில் அதே ஆண்டில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது.
இரு வழக்குகளையும் சேர்த்து விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்யும் வகையில் நடுநிலை அறிவுரையாளர்(அமிகஸ் கியூரி) வழக்கறிஞர் டி.கீதா சிவகாசி பகுதியில் உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய பட்டாசு ஆலைகளில் நவம்பர் 28, 29 இரு நாட்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று காலை முதல் வழக்கறிஞர் கீதா, சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு கழகம் சார்பில் அதிகாரி கோவிந்த ராஜ் உடன் இருந்தார்.
அப்போது அவர் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், வெடி மருந்து கலவை, மருந்து செலுத்துதல் குறித்து நேரில் ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து நாளையும் சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் வழக்கறிஞர் கீதா ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.