“தமிழகத்தில் வரிச்சுமை துன்பத்தைக் களையவே ரூ.10,000...” - சென்னையில் பழனிசாமி விவரிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated on
3 min read

சென்னை: “மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய இந்த அரசு தேவையா? திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களையவே உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். ” என்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எதிர்வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அன்று சென்னை மாநகரில் உள்ள வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அண்ணா நகர், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் அண்ணா நகர் பரப்புரையில் அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் தீய சக்தி திமுக ஆட்சி எந்த பெரிய திட்டமும் கொடுக்கவில்லை. குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை. இதே அதிமுக ஆட்சியில் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம் கொண்டுவந்தோம்.

இந்தியாவில் ஒரு திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி கொண்டுவந்தது அதிமுக அரசு. மத்திய ஆமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொடுத்தோம், பெரிஃபெரல் ரிங் ரோடு 14 ஆயிரம் கோடியில் கொண்டுவந்தோம். ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்தார்.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. திமுக கட்டுப்படுத்தவில்லை. பொம்மை முதல்வர் ஆள்கிறார். 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். கடனையெல்லாம் நீங்கள்தான் கட்ட வேண்டும். நான் உட்பட எல்லோர் தலையிலும் கடன் இருக்கிறது.

திமுகவின் ஒரே சாதனை கடன்காரனாக ஆக்கியதுதான். மோசமான நிர்வாகத் திறமையற்ற அரசு தேவையா? இந்தியாவில் சூப்பர் முதல்வராம், முதன்மை அரசாம். எதில்? ஊழல் செய்வதிலும் கொள்ளையடிப்பதிலும் கடன் வாங்குவதிலும் முதன்மை அரசாங்கம். கடனை வாங்கி கொள்ளையடித்தனர்.

அரசுத் துறையில் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களும், அரசு சார்ந்த இடங்களில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் என மொத்தம் ஐந்தரை லட்சம் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆனால், இந்த ஐந்தாண்டுகளில் வெறும் 94 ஆயிரம் பேர் தான் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுவே, இந்த ஐந்தாண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். ஓய்வு பெற்றவர்கள் அளவுக்குக் கூட காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை.

திமுகவில் தான் இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியாம். யாரிடம் டூப்பு விடுகிறீர்கள்? அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் தான் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டது.

நான் வெளிநாடு போனேன் என்றார், எதுக்கு? சைக்கிள் ஓட்டப்போனார். இங்கு ஏற்கனவே பேட்டரி சைக்கிள் ஓட்டினார். தானாக போய்க்கொண்டிருக்கும் சைக்கிள். உடல்நிலை சரியில்லை என்று பரவலாக பேசினார்கள். அதனால் ஜிம்முக்கு போனார் பளு தூக்கினார். இதையா மக்கள் கேட்டார்கள்? நாட்டுக்கு என்ன செய்தார் என்று தான் கேட்டனர். சர்க்கஸ் மாதிரி வேடிக்கை காட்டினார்.

கடந்த 2025-ல் வெளிநாடு செல்லும்போது ஒரு பேட்டி கொடுத்தார். 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன்மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதில் 77 சதவிகித ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்றும் சொன்னார். பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை எதனால் நடக்கிறது என்று தெரியுமா? நடவடிக்கை எடுக்கிறாரா? 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள் அதை தடுக்க துப்பில்லை. திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது, அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்கிறார். போக்சோ என்றால் சிறுமிகள் பாலியல் வழக்கு. இந்த ஆட்சி நல்லாட்சியா..? அதுக்கு 84 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததை பெருமையாகப் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்குப் பாதிப்பு. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்தேன். பேட்டி கொடுத்தேன், கண்டுகொள்ளவே இல்லை. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தடுக்க முடியவில்லை. திமுகவினர் துணை நிற்பதால் காவல் துறையால் தடுக்க முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டு வரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர்.

மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய இந்த அரசு தேவையா? திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி</p></div>
“தேர்தல் ஆணையம் இப்போது பாஜகவின் கிளைக் கழகம்!” - தி.மலையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in