

கோப்புப் படம்
சென்னை: தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விளக்குவதற்கான கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரச்சாரம் தொடர்பாக சுவிதா இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.பாரதி (திமுக): தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சிலைகள் மூடப்படும் என கூறுகின்றனர். அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், உயிரோடு இருப்பவர்கள் சிலைகளை மட்டும்தான் மூட வேண்டும் எனவும், மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை திமுக வலியுறுத்தியது.
குறிப்பாக, அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்.14-ம் தேதி வர உள்ளது. ஆகவே அதுபோன்ற சிலைகளை மூடுவதால், பிரச்சினைகள் வரும் என தெரிவித்துள்ளோம். அதிமுகவினர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அவர்கள் தோல்விக்கான காரணத்தை இப்போதே தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
டி.ஜெயக்குமார் (அதிமுக): துணை வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். கடந்த காலங்களைபோல் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தலைவர்களின் படங்களை மறைக்கக் கூடாது.
பறக்கும் படைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்க வாய்ப்புள்ளதால், அதில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்குமேல் ஒரே இடத்தில் பணி புரிந்தால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தபால் வாக்குகளை அரை மணி நேரத்தில் எண்ணி முடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.
கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்): தேசிய தலைவர்கள் இங்கு வந்து பிரச்சாரம் செய்யும்போது ஒரு வேட்பாளர் மட்டுமில்லாமல், பல வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வார்கள். அப்போது, குறிப்பிட்ட வேட்பாளருக்கு மட்டும் தேர்தல் செலவை இணைக்காமல், அந்த கட்சியில் செலவு கணக்கை தேர்தல் ஆணையம் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
பிரச்சாரம் செய்ய ஒவ்வொரு கட்சிக்கும் 40 தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கார் மட்டும் இல்லாமல் எந்த காரில் வேண்டுமானாலும் வந்து பிரச்சாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும், செலவு கணக்கை வேட்பாளர்கள் பதிவு செய்த நாட்களில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறோம்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): சென்னை மாவட்டத்தில் கண்காணிப்புக் குழு வாகனத்தில் உதவி பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரிகளைதான் நியமனம் செய்துள்ளனர். வாகனத்தில் இடம்பெற்றுள்ள வீடியோகிராபர்கள் குறித்தான தகவல்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை. வேட்பாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேலான பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செய்யக்கூடாது என சொல்லி உள்ளனர். பல உயர் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படாமல் இருக்கிறார்கள். அது குறித்தும் புகார் அளித்தோம்.
பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்குப்பதிவின்போது முதுநிலை மருத்துவம், செவிலியர் கல்வி பயில்வோருக்கு விடுமுறை இல்லை. அவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்க வலியுறுத்தி உள்ளோம். தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தினோம்.
செந்தில்குமார் (நாம் தமிழர்): நாம் தமிழர் கட்சியில் 25 வயதுடைய வேட்பாளர்கள் அதிகம். தற்போது அந்த வயதை எட்டாமல் சிலர் இருந்தாலும் வேட்புமனு பரிசீலனை நடைபெறும்போது அவர்கள் அனைவரும் 25 வயது பூர்த்தி அடைந்திருப்பர் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கூறினோம். வாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதிக்க கூறினோம். நாம் தமிழர் கட்சி சின்னம் இந்த முறையும் தெளிவாக இல்லை. அது வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாக தெரியும்படி வலியுறுத்தினோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.