

அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு தான் காப்பியடித்து வருகிறது என்றும் நல்லா கதறுங்க சார்-களே என்றும் அமைச்சர்களுக்கு அதிமுக பதிலளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் என்பன உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக அமைச்சர்கள், திமுகவின் திட்டங்களை காபி, பேஸ்ட் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுக அரசின் திட்டங்களை தான் திமுக அரசு காப்பியடித்துள்ளது என எக்ஸ் தள பக்கத்தில் அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. அதன் விவரம்: திமுக அரசு நான்கரை ஆண்டுகளாக, அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
அதிமுகவில் செயல்படுத்தப்பட்ட அம்மா மருந்தகம் திட்டத்தை காப்பியடித்து முதல்வர் மருந்தகம், அம்மா மினி கிளினிக்குக்கு பதிலாக மக்களைத் தேடி மருத்துவம், தாலிக்கு தங்கம் திட்டத்தை உல்டா செய்து புதுமைப் பெண் திட்டம் என திமுக அரசு காப்பியடித்து இருப்பதை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே சொந்தக்காரங்க நாங்க தான். ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்துக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1500 என அறிவித்தோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய முதல்வர் ஸ்டாலினின் அரசு வேறென்ன செய்தது?
திமுக அரசின் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பழனிசாமியின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் கழித்து தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கவில்லை. தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவுபடுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?
பழனிசாமி, ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது திமுகவினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெரிச்சல்! நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே. இன்னும் 2 மாதம் தான். இவ்வாறு அதிமுக சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.