

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுகூட்டம் நாளை (டிச.10) நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
இதுதொடர்பாக முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டால், வரும் 15-ம் தேதிக்குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.