புதுச்சேரியில் இன்று பேசுகிறார் விஜய்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

புதுச்சேரியில் இன்று பேசுகிறார் விஜய்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
Updated on
1 min read

புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் அனுமதி கிடையாது என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி உப்பளத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின், ‘புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. தலைவர் விஜய், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாதவர். எனவே, புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள்,முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. தலைவர் விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும் போதும் அவரது வாகனத்தை பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும்.

காவல்துறையின் விதிகளுக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் வகையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எளிதில் அடையாளம் காணும் வகையில், நிர்வாகிகள் அனைவரும் கட்சி சார்பில் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க கூடாது. அரசு கட்டிடங்கள், மரங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக்கூடாது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித போக்குவரத்து இடையூறும் செய்ய கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று பேசுகிறார் விஜய்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
“தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்” - ஸ்டாலினுக்கு அமித் ஷா எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in