

முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் நா.பாலகங்கா, இளவரசன், வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ரவி, விஜயதரணி, முருகேசன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். பாஜகவில் இருந்து விலகி முன்னாள் எம்எல்ஏ. விஜயதரணியும் தவெகவில் ஐக்கியமானார்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் பலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ ரவி, முன்னாள் நெல்லை மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அதேபோல், காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ. விஜயதரணிக்கு, பாஜகவில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாததால், தற்போது பாஜகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமானார். மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து தவெகவில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கு, பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் ஆகியோர் கட்சியின் துண்டை அணிவித்து, வரவேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் விஜயதரணி கூறியதாவது: தமிழகத்தை வழிநடத்தக்கூடிய தகுதி பெற்ற ஒரு கட்சியாக தவெக இருக்கிறது. தவெகவின் ஆட்சியை இந்த நாடேதிரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியாவையே வழிநடத்தக்கூடிய இடத்தில் முதல்வர் விஜய் இருப்பார்.
பாஜகவில் இரண்டரை ஆண்டு காலம் எந்த பணியும் இல்லாமல் பயணித்திருக் கிறேன். அரசியலில் பணி என்பது அவசியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களின் உழைப்பை பயன்படுத்தி மக்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பை வழங்கக் கூடிய இடத்தில் இன்று தவெக உருவாகி இருக்கிறது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து, அவர்கள் எங்களை அழைத்து கட்சியில் இணைத்திருக்கின்றனர் என்றார்.