

மதுரை: பழநி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக எம்.பி. மகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை மோசடியாக பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல்வேறு உண்மைகளை மறைத்துப்பத்திரம் பதிய உத்தரவு பெற்றுள்ளனர். இந்த பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிலப் பதிவை முந்தைய சார்பதிவாளர் முடித்துள்ளார். ஜஸ்டின் மணிகண்டன் ஆவண எண் வழங்கியுள்ளார். இருப்பினும் முந்தைய சார் பதிவாளர் பெயரும், ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு சார் பதிவாளராக நியமிக்க மாவட்டப் பதிவாளரையும் வழக்கில் சேர்க்கவில்லை.
ஏற்கெனவே இரு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு பதிவாளராக நியமிக்கப் பரிந்துரை செய்தது யார், இந்த மோசடிக்கு அவரைத் தேர்வு செய்தது யார் என விசாரிக்க வேண்டும். பெரிய சதித் திட்டம் நடந்துள்ளது. பதிவுத் துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. எனவே வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும்,விசாரணையைக் கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தும் உத்தரவிட வேண்டும்.