வேட்பாளர் வரலாறு: அதிமுகவில் முதற்கட்டமாக டெல்டாவில் அறிவிக்கப்பட்ட ஐவர்!

வேட்பாளர் வரலாறு: அதிமுகவில் முதற்கட்டமாக டெல்டாவில் அறிவிக்கப்பட்ட ஐவர்!
Updated on
2 min read

திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.காமராஜ் (நன்னிலம்): திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர், 2016-ம் ஆண்டு இதே தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு மீண்டும் அமைச்சரானார். 2021 தேர்தலில் இதே தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு பெற்றார். தற்போது 4-வது முறையாக களம் காண்கிறார். இவருக்கு மனைவி லதா மகேஸ்வரி, மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர் உள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்): கரூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (60), கட்சியில் மாவட்டச் செயலாளராக உள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர், 2021 தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது இந்தத் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று தெரிந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்): நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ள ஓ.எஸ்.மணியன்(71) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பியூசி வரை படித்துள்ள இவர் 2006, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

இதில், 2006-ல் தோல்வியடைந்த இவர், 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 2009 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் எஸ்.கே.வேதரத்தினத்தை 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாரதி, மருத்துவர் வாசுகி என 2 மகள்கள் உள்ளனர்.

சி.விஜயபாஸ்கர் (விராலிமலை): புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (52) எம்பிபிஎஸ், பி.எல் படித்துள்ளார். கட்சியில் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். இவர், 2001-ல் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2011-ல் புதிதாக உருவாக்கப்பட்ட விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, 2016, 2021 ஆகிய தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த முறை இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பனை விட 23,598 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு மனைவி ரம்யா மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

தாமரை எஸ்.ராஜேந்திரன் (அரியலூர்): அரியலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தாமரை எஸ்.ராஜேந்திரன் (66), கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2021 தேர்தலில் மதிமுக வேட்பாளர் சின்னப்பாவிடம் 3,234 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தற்போது 3-வது முறையாக அரியலூர் தொகுதியில் களம் காண்கிறார்.

வேட்பாளர் வரலாறு: அதிமுகவில் முதற்கட்டமாக டெல்டாவில் அறிவிக்கப்பட்ட ஐவர்!
வென்ற இடங்களில் பின்வாங்கல், வட தமிழகத்தில் ‘நோ’ - பாஜக தொகுதிகள் ‘தெரிவு’ சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in