

முதல்வர் விஜய்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 மே 22, 23-ம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் தரக்கோரி முதல்வரிடம் முறையிட்டனர். அதை பரிசீலனை செய்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி வழங்கப்படவுள்ளது.
படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.10 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.