லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி!

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி!
Updated on
1 min read

சென்னை: லைகா நிறுவனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரி நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், ‘வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், பணத்தை திரட்ட அவகாசம் தேவைப்படுவதால், 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்து எட்டு வாரங்கள் கடந்து விட்டதால், அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி!
ரீ-ரிலீஸில் மோதும் விஜய் – அஜித் படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in