

தூய்மைப் பணியாளர் பத்மாவை கவுரவித்த ரஜினிகாந்த்
சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி அவரை கவுரவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48), தூய்மைப் பணியாளர். இவர் தி.நகரில், வண்டிக்காரன் பகுதியில் கடந்த மாதம் 11-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார்.
அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. உடனடியாக, நகையை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரை சேர்ந்த பரமேஷ் (46) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
மேலும், மீட்கப்பட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குப்பையில் கிடந்த நகையை காவலர்களிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலினும் பத்மாவை பாராட்டி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.
தொடர்ந்து, சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் ‘மை ஸ்டாம்பில்’ பத்மாவின் ஃபோட்டோவுடன் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.
இதனிடையே, இன்று நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார். மேலும், தங்கச் சங்கிலியையும் ரஜினிகாந்த் பரிசளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினியின் பிஆர்ஓ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: ”முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.