தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் 4½ ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் 4½ ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணயாற்ற தேர்வு செய்யப்பட்ட 201 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்படாத செவிலியர் பற்றாக்குறை பிரச்சினை, முழுமையாக முறைப்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் 4,724 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கான மாநில சிறப்பு மருத்துவ நிறுவனமாக ரூ.16.06 கோடி மதிப்பீட்டில்தரம் உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர்களிடம் 4½ ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். பயிற்சி பெறும் ஓர் ஆண்டுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ஒரு தனியார் கல்லூரி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. அது தொடர்பான விசாரணையில் 15 மாணவர்கள் பெற்றோருடன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதுபோல் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இடதுசாரிகள் ஊழலற்ற ஆட்சியை விரும்புவர். அது போன்ற ஆட்சியைத்தான் தமிழக அரசு கொடுத்து வருகிறது. அதனால் அவர்களுக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி அதிமுகவை ஒரு கட்சி போல் நடத்தாமல் கம்பெனி போல் நடத்துகிறார்” என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆர்.வி.ரஞ்சித்குமார், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் வ.லோகநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் 4½ ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்வெட்டு: செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in