

சென்னை: ‘தமிழகத்தில் நாளுக்குநாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில்கூட மின்தடை ஏற்படும் அளவுக்கு மின் நிர்வாகம் சீரழிந்துவிட்டது’ என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்வெட்டைப் பற்றி பேசாத நாட்களே இல்லை. அரசு விழாக்களிலும், சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும், உச்சபட்சமாகத் தலைமைச் செயலகத்தில்கூட மின்தடை ஏற்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியில், எவ்விதத் தடையும் இன்றி சீரான மின் விநியோகம் செய்யப்பட்டது. டான்ஜெட்கோவின் சொந்த மின் உற்பத்தி 29 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் பிளான்ட் உற்பத்தி 34 சதவீதம் முதல் 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வடசென்னை ஸ்டேஜ் 3 மற்றும் உடன்குடி போன்ற புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.20-க்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தவர்கள், இன்று வெளிச்சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர்.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே டெண்டர் கோரப்பட்டு பொங்கலுக்கு முன்பே இறுதி செய்யப்படும். ஆனால் தற்போது, வெறும் 5 நாள் அவகாசத்தில் 2,500 மெகா வாட்டுக்கு அவசரக்கதியாக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்படுவதில் கடுமையான முறைகேடுகளும், ஊழலும் நடந்துள்ளன.
இதனால் மின்வாரியத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்து, அது மக்கள் மீது மின் கட்டணச் சுமையாக வந்து சேரும். எனவே, கடந்த கால திராவிட மாடல் ஆட்சியின் முறைகளைப் பின்பற்றி தமிழகத்தில் தடையற்ற சீரான மின் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.