

சென்னை: போக்குவரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு எழுதிய கடிதம்: புதிய ஆட்டோரிக்சா வாகன விற்பனையின் போது வாகன விற்பனை முகவர்கள் வாடிக்கையாளர்களிடம் வாகன விலையை விட கூடுதலான கட்டணங்கள் வசூலிப்பதாக அதிக புகார்கள் பெறப்படுகின்றன.
எனவே, அனைத்து வாகன விற்பனை முகவர்களும் கட்டாயமாக தங்கள் விற்பனை மையங்களில் வாகனங்களின் விற்பனை விலையை அனைவரும் எளிதில் காணக்கூடிய இடத்தில் மாதிரி வாரியாக காட்சிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு காட்சிப்படுத்தப்படும் விலையில், பொருந்தக்கூடிய அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களின் விவரங்கள் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விதிகளை மீறி விற்பனை விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கும் வாகன விற்பனையாளர்களின் வணிகச் சான்றின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வணிகச் சான்று ரத்து செய்யப்படும்.
இதுதொடர்பாக கண்காணித்து, புகார்கள் பெறப்பட்டால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.