“பேரவையில் கண்ணியக்குறைவாக செயல்பட்டால் நடவடிக்கை” - சபாநாயகர் எச்சரிக்கை

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்

Updated on
1 min read

சென்னை: ‘சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்தார்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அவையில் எம்எல்ஏக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் இன்று பேசியது:

“சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் விவாதத்தில் பேசும்போது, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விவரங்கள் மீது தங்கள் கருத்துகளை சொல்லக்கூடாது. அப்படி சொன்னதால், மதுரையைச் சேர்ந்த உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எவரையும் தனிப்பட்ட முறையில் முறையற்ற வார்த்தைகளால் தாக்கி பேசக்கூடாது. மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. சட்டப்பேரவை நடவடிக்கைகள் சிறப்பாக அமைய, உறுப்பினர்கள் உரையாற்றும்போது சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும்.

உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து தங்கள் உரையில் பேசலாம். பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், அவையில் உள்ள உறுப்பினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையன்று அவையில் சில உறுப்பினர்கள், மற்றவரை கேலி செய்யும் விதமாக செய்த சைகைகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகின்றன.

இது சட்டப்பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும். எனவே, இத்தகைய கண்ணியக்குறைவான செயல்களில் இனிவரும் காலங்களில் ஈடுபடக்கூடாது. அதை மீறினால் அது பேரவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்</p></div>
மும்பையில் பருவமழை தீவிரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in