

கோப்புப் படம்
மதுரை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து மாநிலம் முழுவதும் 6 மாதங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
இதை மாவட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த வழக்கு அதே நீதிபதிகள் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.
இப்பணிக்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆர்டிஓ தகுதியில் உள்ள மாவட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர் ஆஜராக உத்தரவிடப்படும்.
மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.