

கும்பகோணம்: “காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது மற்றும் முறைப் பாசனம் தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் விஜய், மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கும்பகோணம் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம், “தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளை சேர்த்து மொத்தம் 544 பள்ளிகளில் மொத்தம் 50 ஆயிரம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது மற்றும் முறைப் பாசனம் தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரிரு நாட்களில் அவர்கள் அது குறித்து அறிவிப்பார்கள். கிளை வாய்க்கால்களில் தூர் வாரும் பணி மீதம் உள்ளது. அந்த தூர்வாரும் பணிகள் முடிவடைந்ததும் தண்ணீர் திறந்து விடப்படும்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, மாநகர ஆணையர் சுதா, மேயர் சரவணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் கவுசல்யா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்த தவெகவினர்
கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகளை, அமைச்சருடன் வந்த தவெக நிர்வாகிகள் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டனர். இதனால், நிகழ்ச்சி முடியும் வரை மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இத்திட்டம் தொடங்கி வைத்தபோது தவெக ரீல்ஸ் பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு, மாணவிகள் அமைதியாக உணவருந்த முடியாதபடி அங்கும் இங்குமாக ஓடி ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்ததால் மாணவர்கள் நிம்மதியாக உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். அமைச்சருடன் வந்தவர்கள் என்பதால் அவர்களைக் கண்டிக்க முடியாமல் வேதனையடைந்த அரசு அதிகாரிகள், இதுபோன்ற ரீல்ஸ் பிரியர்களை தவெக தலைமை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.