

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் செ.ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது கட்டாயமாகும்.
எனவே, அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்கத்தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்ய வசதியாக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார்கள் இருந்தால், கட்டுப்பாட்டு அலுவலர்களை பொதுமக்கள், தொழிலாளர்கள் தொடர்புகொள்ளலாம். அலுவலர்களின் பெயர், தொடர்பு எண் விவரம்:
தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள் எம்.வி.கார்த்திகேயன் (திருவொற்றியூர்) - 9444221011, எஸ்.கமலக்கண்ணன் (சென்னை) - 9884675712, நிர்வாக அலுவலர் எஸ்.சூரியா (சென்னை) - 9884470526, துணை இயக்குநர் த.மணிசங்கர் (காஞ்சிபுரம்) - 9940468249. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.