

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: அமலாக்கத்துறை வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே புகார், சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டோருக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்தா ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எங்கள் குடும்பத்தினருக்கு எதிராக மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் என்னை 4-வது எதிரியாக சேர்த்துள்ளனர்.
வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் நகல் கேட்டு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். என் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் அப்துல்குத்தூஸ், ரஜினிஷ் பதியில் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில், “அமலாக்கத்துறை வசமுள்ள ஆவணங்களைக் கேட்டு மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது சட்டவிரோதம். அமலாக்கத் துறை புகாருடன் தாக்கல் செய்யும் ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டோருக்கு அவரது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிஎன்எஸ்எஸ் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், “குற்றவியல் நீதிமன்றம் ஒரு வழக்கில் கவனத்துக்கு எடுப்பதற்கு முந்தைய நிலையில், ஆவணங்களைப் பெற மனுதாரர்களுக்கு உரிமை இல்லை. நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த பிறகே ஆவணங்களைப் பெறும் உரிமையை மனுதாரர்கள் பெறுகின்றனர். இதனால். மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீதான வழக்கு, பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் அமலாக்கத் துறையால் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுக்கும் முன்பாக குற்றம்சாட்டப்பட்டோருக்கு தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இதை பின்பற்றத் தவறினால் பணமோசடி தொடர்பான வழக்குகளின் முழு நடவடிக்கையும் செல்லாததாகிவிடும்.
பிஎம்எல்ஏ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு விசாரணை தொடங்கும் முன்பே ஆவணங்கள் வழங்கப்பட்ட உதாரணங்கள் உள்ளன. மனுதாரருக்கு மட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான வாய்ப்பு என்பது வெறும் வெற்று சம்பிரதாயம் அல்ல. எதிர் தரப்பினருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட உள்ள அனைத்துச் சான்றுகளையும் ஆவணங்களையும் வெளியிட வேண்டும். ஆவணங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டை மறுக்கவோ, குறுக்கு விசாரணை செய்யவோ வாய்ப்பில்லாமல் போகும்.
குற்ற வழக்குகள் மற்றும் பிஎன்எஸ்எஸ், பிஎம்எல்ஏ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு புகார், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் உட்பட தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட உள்ள அனைத்து ஆதாரங்களையும் அணுகுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு. மேலும், அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கப் பயன்படுத்தாத ஆவணங்கள் வைத்திருந்தாலும் அது குற்றம்சாட்டப்பட்டோருக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் அந்த ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
குற்றவியல் சட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்புதான் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். ஆனால், பிஎம்எல்ஏ சட்டத்தில் அந்த சுமை குற்றம்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும். இது பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் ஆதாரமற்ற, பழிவாங்கும் நோக்கத்துடன் கூடிய, திட்டமிட்டு புனையப்பட்ட அல்லது துன்புறுத்தும் வகையில் வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்க்க உதவும்.
இதனால் மனுதாரருக்கு ஆவணங்களை வழங்க மறுத்து மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு வழக்கில் ஆதாரமாகச் சமர்பிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களையும் 4 வாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.