

சென்னை: கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் முக்கிய நிர்வாகியைத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேல்முரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த, இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் கேரள போலீஸார் விசாரித்து, பிஎஃப்ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். பின்னர், வழக்கின் தீவிரத்தைக் கருதி இது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
என்ஐஏ விசாரணையில், இந்தக் கொலைச் சதியில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் பிஎஃப்ஐ அமைப்பின் பாலக்காடு மாவட்டத் தலைவராக இருந்த முஹமது அலி என தெரியவந்தது.
இவர் கொலைக்குத் திட்டமிட்டது மட்டுமின்றி, தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் மீது ஐபிசி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே, முஹமது அலி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால், அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டதுடன், இன்டர்போல் மூலம் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஹமது அலி சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அவர் வந்திறங்கியதும் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முஹமது அலியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொலை சம்பவத்துக்கு பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பதுங்கியிருந்ததும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டும் நோக்கத்துடன் பிஎஃப்ஐ அமைப்பு செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இதற்காக அந்த அமைப்பினருக்கு ‘யோகா மற்றும் உடல் பயிற்சி’ என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்ததும், உளவு சேகரிப்பதற்காக ‘ரிப்போர்ட்டர்ஸ் விங்’ மற்றும் தாக்குதல்களை நடத்துவதற்காக ‘சர்வீஸ் டீம்’ போன்ற பிரத்யேகப் பிரிவுகளை உருவாக்கிச் செயல்பட்டு வந்தும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனிவாசன் கொலை வழக்கில் முஹமது அலி கைதோடு சேர்த்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது. முஹமது அலியிடம் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.