26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு

26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு
Updated on
1 min read

குருகிராம்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இன்று (ஜூலை 24) நள்ளிரவு தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார். 

குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக், "பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 எம்பிக்கள் என்னை நேரில் சந்தித்தும் அல்லது கடிதம் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், நாட்டில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் நோக்கிலும் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன். இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவில் விரிவாக விளக்குகிறேன். அதேவேளையில் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தராதவாறு அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வினாத்தாள் கசிவுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய மசோதா குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது அமைதியான போராட்டம் தொடரும் என்றும், ஜூலை 24 அன்று நாடு முழுவதும் மாவட்ட அளவில் அமைதிப் பேரணிகள் நடைபெறும் என்றும் சிஜேபி அமைப்பு அறிவித்துள்ளது.

26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சோனம் வாங்சுக் அறிவிப்பு
வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை: பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in