

அபய் குமார் சிங்
சென்னை: சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக அபய் குமார் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, பொறுப்பு டிஜிபி-யாக, நிர்வாகப் பிரிவில் இருந்த வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிரந்தர டிஜிபி-யை நியமிக்க வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், 15 நாள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து, வெங்கடராமனுக்கு பதில் சட்டம் - ஒழுங்கு பொறுப்புடிஜிபி-யாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (இயக்குநர்) டிஜிபி-யான அபய் குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, அவர் நேற்று காலை 10.30 மணியளவில், பொறுப்பு டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை நேரில் சந்தித்து சக போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற அபய் குமார் சிங் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு ஐபிஎஸ்-ஆக தேர்வானவர். பி.டெக் மெக்கானிக்கல் முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்.
தூத்துக்குடி சப்-டிவிசனில் ஏஎஸ்பி-யாக பணியை தொடங்கிய அவர் பின்னர், மணியாச்சி சப்-டிவிசனில் பணியாற்றினார். தொடர்ந்து எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தூத்துக்குடி, சிபிசிஐடி பிரிவு, மதுரை ஆகிய பகுதிகளிலும், டிஐஜியாக ராமநாதபுரம் சரகம், லஞ்ச ஒழிப்புத் துறை,சென்னை வடக்கு இணை ஆணையர், ரயில்வே மற்றும் தஞ்சாவூர் சரகத்திலும் பணியாற்றினார்.
பின்னர், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி காவல் ஆணையர், சென்னை கூடுதல் ஆணையர் (க்ரைம்), தென்மண்டல ஐஜி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும், அதைத் தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தலைமை விஜிலென்ஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஆயுதப்படை, சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றினார்.
பின்னர், டிஜிபியாக பதவிஉயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றினார். அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2008 மற்றும் 2020-ல் மாநில மற்றும் மத்திய அரசு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.