

சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொறுப்பு டிஜிபியான வெங்கடராமன் வரும் டிச.25-ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதன்காரணமாக டிஜிபி பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுமார் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியாக உள்ளார். அவருக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.