

திருவள்ளூர்: எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல் ஆகியவற்றை குறைப்பதற்காக, தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கிமீ தூரத்துக்கு சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
இதில், எண்ணூர் முதல் பஞ்செட்டி வரை நடைபெற்று வரும் சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் தொடர்பாக நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது: திருச்சியில் இருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டை அடைந்தாலும், செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வந்து சேர மேலும் 4 மணி நேரமாகிறது. அதற்கு காரணம், போக்குவரத்து அதிகளவில் இருப்பதுதான்.
கடந்த 40 ஆண்டுகளாக போக்குவரத்தை சீர் செய்ய முறையான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. சென்னைக்குள்ளே வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் தனியே திட்டம் வகுத்து வருகிறோம். எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், அதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும்.
சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் உலகத்தரத்தில் 6 வழி சாலைகளாக மாற்றப்படும். இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.