

அமைச்சர் மரிய வில்சன்
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசின் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் தனி தீர்மானத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று கொண்டுவந்தார். அதில், ‘மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதிசெய்ய வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சி திறன் மற்றும் வளர்ச்சி தேவையை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிர்வு வெளிப்படையான புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக மத்திய வரிகளின் பகிர்வுக்கான அளவுக்கோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கும் நிலை ஏற்படாதவாறு வைக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் மத்திய வரிகளின் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது, தமிழகத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வரவேற்று பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, “தற்போது மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும் நிதிப் பகிர்வு 41 சதவீதமாக உள்ளது.
அதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த திருத்தங்களுடன் தீர்மானத்தை திமுக வரவேற்கிறது” என்றார்.
அதேபோல், அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் பழனிசாமியும் இந்த தீர்மானத்தை வரவேற்றார். அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்த தீர்மானம், பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.