

படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு அரங்கில் ஹாக்கி அணியினருக்கான சிறப்பு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதனை கொரியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கண்டுகளித்தனர்.
மதுரையில் 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நவ.28-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரைக்கும் நடக்கிறது. இதில் உலக நாடுகளை சேர்ந்த 12 ஹாக்கி அணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
போட்டி காலை 11 மணிக்கு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் போட்டி தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கொரியா, ஓமன், சீனா, பங்களாதேஷ் ஆஸ்திரியா,எகிப்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த தலா 30 ஹாக்கி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாடு அவிழ்க்கும் போதும், களத்தில் விளையாடும் காளைகளைக் கண்டு, அடக்க முயலும் வீரர்களை பார்த்தும் கைதட்டி ஆராவாராமாக ரசித்தனர்.
முன்னதாக எட்டு ஆம்னி பேருந்துகளில் ஹாக்கி வீரர்கள் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு அணி வீரர்களும் ஜல்லிக்கட்டு அரங்கு முன்பு உள்ள ஏறுதழுவுதல் சிலை முன்பாக இருந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு அவர்கள்அரங்கிற்குள் சென்றனர்.
இவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பேட்டி சட்டை, வேட்டி, துண்டு அணிந்து விழாவில் பங்கேற்றனர் இவர்களுக்கு என அரங்கில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் காளைகள் உட்பட 104 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் ஒருங்கிணைத்தார். போட்டியை ஆங்கிலம் மற்றும் தமிழில் இரண்டு பெண்கள் தொகுத்து வழங்கினர்