‘தாமரை இலை தாவும் தவளை’ - தலைவர்கள் கைவிட்ட மாரத்தான் பிரச்சாரத்தால் வழக்கொழிந்து வரும் பாதுகாப்பு முறை

‘தாமரை இலை தாவும் தவளை’ - தலைவர்கள் கைவிட்ட மாரத்தான் பிரச்சாரத்தால் வழக்கொழிந்து வரும் பாதுகாப்பு முறை
Updated on
1 min read

திருச்சி: சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களின்போது அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வது வழக்கம். ஒரு காலத்தில், திருச்சியில் காலை 11 மணிக்கு அண்ணா பேசுகிறார் என்று அறிவித்தால் அவர் வருவதற்கு இரவு 11 மணி கூட ஆகலாம்.

இதனால், பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருக்க கொள்கை முழக்க பாடல் கச்சேரிகள், நாடகங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். மாரத்தான் போன்று தொடர் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபடும்போது, அவர்கள் பேசும் ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது.

அதற்காக காவல்துறையில் ‘தாமரை இலை தாவும் தவளை’ (Leaf Frog Method) என்ற பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியது: திருச்சி தென்னூரில் காலை 10 மணிக்கு ஒரு கட்சியின் தலைவர் பிரச்சாரம் தொடங்கி புத்தூர், தில்லைநகர், அண்ணாசிலை, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம் டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு முடிக்கிறார் என்றால், இத்தனை இடங்களுக்கும் பாதுகாப்புப் பணிக்கு குறைந்தது தலா 500 போலீஸார் தேவை.

ஆனால், அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வளவு போலீஸார் இருக்க மாட்டார்கள். அருகில் உள்ள மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் என்பதால் அங்கிருந்தும் போலீஸாரை வரவழைக்க முடியாது. இதற்காகவே ‘தாமரை இலை தாவும் தவளை முறை’யை பயன்படுத்தி வந்தனர்.

அதன்படி, முதல் இடத்தில் தலைவர் பிரச்சாரம் முடிந்தவுடன், அங்குள்ள போலீஸார் 3-வது இடத்துக்குச் சென்றுவிடுவர். இதேபோல, 2-வது இடத்தில் உள்ளவர்கள் 4-வது இடத்துக்குச் செல்வர். இதுபோன்று எத்தனை இடங்கள் உள்ளனவோ அத்தனை இடத்துக்கும் போலீஸார் தாவி தாவிச் செல்வதால் இந்த முறைக்கு ‘தாமரை இலை தாவும் தவளை’ என்று பெயர்.

அண்ணா, எம்ஜிஆர் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வரை தொடர் பிரச்சாரம் என்பது தேர்தல் நேரத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறும். ஆனால் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர வேறு யாரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது இல்லை. இதனால் இம்முறையும் வழக்கொழிந்து வருகிறது என்றார்.

‘தாமரை இலை தாவும் தவளை’ - தலைவர்கள் கைவிட்ட மாரத்தான் பிரச்சாரத்தால் வழக்கொழிந்து வரும் பாதுகாப்பு முறை
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in