

படம் : நா. தங்கரத்தினம்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல் அனைவரையும் கவர்ந்தது.
திண்டுக்கல் அசில் ஆர்கனைசேஷன், உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்திந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் 11 வது ஆண்டாக கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, அந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சேவல்கள் கலந்துகொண்டன.
கண்காட்சியில் கீரி, மயில், எண்ணெய்கருப்பு, கொக்குவெள்ளை, காகம் என பல்வேறு வகையான கிளிமூக்கு விசிறிவால் சேவல்கள் இடம்பெற்றன. சிறந்த சேவல்களுக்கு டிவி, பிரிட்ஜ், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவலை ரங்கராஜன் என்பவர் கண்காட்சிக்கு கொண்டுவந்திருந்தார். விலைக்கு சிலர் கேட்டபோதும் அதை அவர் விற்க மறுத்துவிட்டார். இதேபோல் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான சேவல்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
சேவல் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் கூறுகையில், "நாட்டு இன கிளிமூக்கு விசிறிவால் சேவல் இனங்கள் அழியும் தருவாயில் இருப்பதால் அவற்றை காக்கவே இதுபோன்ற கண்காட்சிகளை நடத்தி அவற்றை பாதுகாத்துவருகிறோம்.
இன்றைய கண்காட்சியில் 320 சேவல்கள் இடம் பெற்றன. சிறந்த சேவல்களை அவற்றின் மூக்கு அமைப்பு, வால் அமைப்பு, கொண்டை அமைப்பு ஆகியவற்றை கொண்டு தேர்வு செய்கிறோம். சிறந்த சேவல்களுக்கு டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்குகிறோம்" என தெரிவித்தார்.