காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: நவ.2-ல் கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: நவ.2-ல் கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவானது. இது, அக்டோபர் 31-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, அதே பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதிகளில் நாளை (அக்.30) வலுவடையக்கூடும்.

இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்.31-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

தமிழகத்தில் நாளை (அக்.30) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

31-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவ.1-ம் தேதி வட கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நவ.2-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், 3-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளையும், நாளை மறுதினமும் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: நவ.2-ல் கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு
“அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுவேன்” - சீமான் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in