

“பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் சாலையில் நிலவும் போக்குவரத்து குளறுபடிகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்” என, வாசகர் பாலசுப்பிரமணியன் ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் புதிதாக கட்டப்படுவதால், பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் தற்காலிகமாக மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரும் வயதானவர்கள் மற்றும் பெண்கள், வடபுறமும், தென்புறமும் சாலையைக் கடக்க சிரமப்படுகின்றனர்.
ஆங்காங்கே இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதாலும், அதிவேகமாக சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாலும் போக்குவரத்து நெரிசலும், குளறுபடிகளும் ஏற்பட்டு வருகிறது. குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் செல்வதால் காய்கறிகளை வாங்க வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தற்காலிக சந்தை செயல்படும் பகுதியில் வடபுறம் மற்றும் தென்புறமுள்ள சாலைகளில் போக்குவரத்து போலீஸாரை நிறுத்தி வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். சாலையை கடந்து மார்க்கெட்டுக்கு செல்ல போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒருவழிப்பாதையில் விதிமீறல்: திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளையங்கோட்டையில் பழமையான காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு, புதிதாக கடைகளை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கியது. ரூ.15.41 கோடியில் புதிதாக மார்க்கெட் அமைக்கப்படுகிறது. அருகிலுள்ள ஜவஹர் மைதானம் மற்றும் பழைய காவலர் குடியிருப்பு அமைந்திருந்த பகுதியில் தற்காலிகமாக மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த தற்காலிக கடைகள் அமைந்துள்ள இடத்துக்கு வடக்கு மற்றும் தென்புற சாலைகளில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சந்தையிலுள்ள கடைகளுக்கு செல்வதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் திருச்செந்தூர் சாலை ஒருவழிப் பாதையாக இருந்தாலும், அதைமீறி வாகனங்கள் சென்று வருகின்றன.
அவ்வப்போது போக்குவரத்து போலீஸார் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும், அபராதங்களை விதித்தாலும் விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர போக்குவரத்து போலீஸார் இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
ஆக்கிரமிப்பு: தற்காலிக கடைகள் செயல்படும் இடத்தில் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் தங்கள் கடைகளின் முன்பு, பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை வரை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலான நேரங்களில் மக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சந்தைக்குள் இயக்குவதால், விபத்து அபாயமும் நிலவுகிறது. இதுதொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.