மதுரை | பணி ஓய்வு நாளில் தான் ஓட்டிய அரசுப் பேருந்தை முத்தமிட்டு கண்கலங்கிய ஓட்டுநர்

ஓட்டுநர் முத்துப்பாண்டி
ஓட்டுநர் முத்துப்பாண்டி
Updated on
1 min read

மதுரை: பணி ஓய்வு நாளில் பேருந்தை கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுத மதுரையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒட்டுநர் முத்துப்பாண்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 60. இவர் திருப்பரங்குன்றம் அரசுப் பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தனது பணியை நிறைவு செய்தார். மாலை பணியை முடித்த பின்பு பேருந்தின் ஸ்டேரிங்கை முத்தமிட்டு தொட்டு வணங்கி பின் பேருந்து படிக்கட்டு வழியாக இறங்கும்போது படிக்கட்டை தொட்டு வணங்கினார். மேலும், பேருந்தின் முன்புறம் தொட்டு வணங்கிய அவர், பேருந்தை கட்டித்தழுவியதுபோல் நின்று கண்ணீர் விட்டு அழுதார்.

இது குறித்து அவர், "எனது 30 ஆண்டு கால சேவையில் மிகவும் நேசித்தது ஓட்டுநர் தொழில் தான். எனது தாய் தந்தையருக்கு பின் இந்தத் தொழிலை உயிராக நேசித்தேன். இந்தத் தொழில் முலம் தான் தனக்கும் மனைவி குழந்தைகள் கிடைத்தது என்பதில் பெருமை கொள்கிறேன். இன்று என் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் வருத்தத்துடன் செல்கிறேன் " எனக் கூறினார்.

தனது பணிக்காலத்தில் பயணிகள், பொதுமக்களிடம் நல்ல முறையில் பழகியவர் என ஓட்டுநர் முத்துப்பாண்டியை சக ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இதனிடையே, ஓய்வு நாளில் பேருந்தை கட்டி தழுவி கண்ணீர் விட்டு அழுத ஒட்டுநர் முத்துப்பாண்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in